தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

வீணாகும் குடிநீர்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் பெரிய பள்ளிவாசல் எதிரே சிறிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் திருகு குழாய் இல்லாமல் தினமும் ஏராளமான தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சியில் பொன்னங்கண்ணிப்பட்டி கிரமத்தில் பெருங்களூர் மற்றும் ஆதனக்கோட்டை இரண்டு ரோடு பிரியும் இடத்தில் சாலையோரம் செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதினால், இந்த வழியாகச் செல்லும் கனராக வாகனங்கள் மின் கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயனற்ற பயணிகள் நிழற்குடை

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள கீழாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை சிலர் கால்நடை தீவனம் வைக்கும் இடமாக மாற்றி வருகின்றனர. இதனால் பொதுமக்கள் இந்த பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அரசு டவுன் பஸ் இயக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, வெட்டன்விடுதி அருகே கடுக்காகாடு, வாணக்கன் காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு புதுக்கோட்டையில் இருந்து வெட்டன் விடுதி வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழிலாளர்கள் பெண்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைந்து வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த அரசு டவுன் பஸ் வெட்டன்விடுதி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த அரசு டவுன் பஸ்சை வாணக்கன்காடு வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கழிவறை அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி கடைவீதி எப்போதும் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். இந்த கே.புதுப்பட்டி கடைவீதிக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். மேலும் கே.புதுப்படியிலிருந்து அறந்தாங்கி, ஏம்பல், மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மக்கள் நடமாட்டம் மிகுந்த கே.புதுப்பட்டி கடை வீதி மற்றும் பஸ் நிறுத்தத்தில் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு ஒரு கழிப்பிடம் கூட அமைக்கப்படவில்லை. இதனால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிறுநீர் கழிப்பது கூட அவதி அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story