தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

திறக்கப்படாத திருவள்ளுவர் மன்ற படிப்பகம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மேற்கு பகுதியில் சுதந்திர போராட்ட காலத்தில் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் மன்றம் தொடர்ந்து படிப்பகமாக செயல்பட்டு வந்தது. அதனால் அந்தப் பகுதிக்கு திருவள்ளுவர் மன்றம் என்றே பெயராக உள்ளது. ஆனால் அங்கு உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் மன்றம் படிப்பகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடமாக கட்டப்பட்டு இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. ஆகவே திருவள்ளுவர் மன்றம் படிப்பகத்தை திறந்து தினசரி பத்திரிக்கைகள் போட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

டாக்டர்கள் இன்றி நோயாளிகள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தஞ்சை மாவட்டத்தையொட்டிய பகுதி என்பதால் அவசர சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை. குறிப்பாக இரவு நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை. 108 ஆம்புலன்சில் வருவோருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கக்கூட டாக்டர்கள் இல்லாததால் உயிர் இழப்புகள் தொடர்ந்து வருகின்றன. மேலும் மருத்துவமனையில் உள்ள பல மருத்துவ உபகரணங்கள் உரிய பணியாளர்கள் இல்லாததால் பயன்படுத்தாத நிலையில் உள்ளது. எனவே கறம்பக்குடி மருத்துவமனைக்கு இரவு பணி டாக்டர் மற்றும் கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், அரிமளம் மார்க்கெட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பின்புறம் உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள மாங்காடு கடைவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் அவ்வப்போது குற்ற செயல்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகைகள் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீர் குழாயில் உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story