தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மரவாபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. அதனால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மரவாபாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விபத்தை தடுக்க வேண்டும்
சேலம்-கரூர், கரூர்-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் சென்டர் மீடியா கட்டப்பட்டு பூச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆங்காங்கே சென்டர் மீடியாவை உடைத்து அந்த வழியாக கார்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சென்டர் மீடியாவில் குறுக்கே உடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தடுப்பு ஏற்படுத்தி வாகனங்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுத்து விபத்தை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
புதிய மின்கம்பம் நட்டும் பலனில்லை
கரூர் மாவட்டம், பேச்சிப்பாறை சுடுகாடு அருகே மின்கம்பம் நடப்பட்டு அந்த கம்பத்தில் உள்ள மின் கம்பியில் இருந்து 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மின்கம்பத்தில் உள்ள கான்கிரீட்டுகள் கீழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக அதன் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் இதுவரை சிதிலமடைந்த மின் கம்பத்தில் உள்ள மின் கம்பிகளை புதிய மின் கம்பத்திற்கு மாற்றாமல் அப்படியே உள்ளது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் மின் கம்பம் முறிந்து தார் சாலையில் விழும் நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், பெரியகோதூர் குளத்துபாளையம் வரை செல்லக்கூடிய தார் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
டாஸ்மாக் கடையால் பெண்கள் அவதி
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பஞ்சப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் தெரு எதிரில் அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுபானக்கடைக்கு மது அருந்த வரும் மதுப்பிரியர்கள் போதை தலைக்கேறிய பிறகு ஆபாசமாக பேசுவதாலும், பெண்களை கேலி செய்வதாலும் இந்த காடையை கடந்து செல்லும் பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.