தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

பயனற்ற அடிப்பம்பு

திருச்சி மாநகராட்சி உறையூர் 10-வது வார்டு வடிவேல் நகர் முதல் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அடிப்பம்பு பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்று தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த அடிப்பம்பை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இருசக்கர வாகன ஓட்டிகளால் போக்குவரத்து நெரிசல்

திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து தினமும் எண்ணற்ற ஊர்களுக்கு அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. துறையூர் பஸ் நிலையத்தில் இருந்து பெரம்பலூர், அரியலூர், சென்னை, உப்பிலியபுரம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, ராசிபுரம், மல்லியகரை, ஆத்தூர், வாழப்பாடி, சேலம் மற்றும் பச்சைமலை செல்லும் பஸ்கள் பாலக்கரை வழியாக சென்று வருகின்றன. சாலையின் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் வரும் வாடிக்கையாளர்கள் வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் உருவாகி வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீழக்குன்னுப்பட்டி காட்டுக்கொட்டத்தில் ரேஷன் கடை இல்லாததால் வாரம் ஒரு முறை ரேஷன் பொருட்களை லாரியில் கொண்டு வந்து வழங்கப்படுகிறது. இதனால் இப்போது மக்கள் அந்த நேரத்தில் வெளியூர் மற்றும் வேலைக்கு செல்லும் போது ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்து பொருட்கள் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அகற்றப்படாத சாக்கடை கழிவுகள்

திருச்சி மாநகராட்சி பர்மா காலனி அண்ணா தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் காலப்போக்கில் தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் தேங்கி நின்றதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த சாக்கடைகளை அள்ளி தூர்வாரினர். தூர்வாரப்பட்ட கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து விரைவில் அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் சீனிவாச நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பம் முடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story