தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

நோயாளிகள் அவதி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பாடாலூர், திருவிளக்குறிச்சி, இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், மருதடி, விஜயகோபாலபுரம், நாட்டார்மங்கலம், கூத்தனூர் கிராம பொதுமக்கள், பொதுமருத்துவ சிகிச்சை, கர்ப்பிணிகள் சிகிச்சை, சர்க்கரை நோய் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. நாட்டார்மங்கலத்தில் இருந்து பாடாலூர் சுகாதார நிலையத்திற்கு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு இருப்பதால் பொதுமக்கள், கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு செல்வதற்கு சிரமமாக இருக்கிறது. எனவே நாட்டார்மங்கலத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் சிகிச்சைபெற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செட்டிகுளம்.

பஸ் வசதியை நீட்டிக்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் நாட்டார்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தனூர் கிராமத்தில் செட்டிகுளம் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நாட்டார்மங்கலத்தில் இறங்கி சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து செல்கின்றனர். துறையூரில் இருந்து மாலை 5.15 மணிக்கு செட்டிகுளம், நாட்டார்மங்கலம் வழியாக ஆலத்தூர் கேட் வரை டவுன் பஸ் செல்கிறது. இந்தப்பஸ்சை பள்ளி மாணவ-மாணவிகள் நலன் கருதி நாட்டார்மங்கலத்தில் இருந்து கூத்தனூர் வழியாக ஆலத்தூர்கேட் வரை பஸ் வசதியை நீட்டிக்க ஏற்பாடு செய்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கூத்தனூர்.

போக்குவரத்திற்கு இடையூறு

பெரம்பலூர் டவுன் பகுதியில் உள்ள ரோவர் பள்ளி ஆர்ச் பகுதியில் இருந்து எளம்பலூர் வரையுள்ள சாலையில், ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டைகளில் ஆங்காங்கே இளைஞர்கள் இரவு நேரத்தில் கூட்டாக அமர்ந்து கொள்கின்றனர். மேலும் அவர்கள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சாலையோரம் நிறுத்துவதினால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனை பெரம்பலூர் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

கூடுதல் மின்விளக்குகள் தேவை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும், அரசு பொது மருத்துவமனைக்கும் இரவு நேரத்தில் செல்வதற்கு போதுமான வெளிச்சம் இல்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். எனவே அதிக வெளிச்சம் தரக்கூடிய போதுமான மின்விளக்குகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குன்னம்.

அரசு டவுன் பஸ்சை இயக்க வேண்டுகோள்

திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம், செட்டிகுளம், நாட்டார்மங்கலம் வழியாக ஆலத்தூர்கேட் வரை இயக்கப்படும் ஒரு அரசு டவுன் பஸ் தினமும் காலை, மதியம், இரவு ஆகிய நேரத்தில் 6 முறை இயக்கப்பட்டு வந்தது. இந்த அரசு டவுன் பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பலரும் சென்று வந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஆலத்தூர்கேட்டில் இருந்து இரவு 8.46 மணிக்கு துறையூருக்கு அந்த அரசு டவுன் பஸ் இயக்கப்படாமல், ஆலத்தூர்கேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை 6 மணிக்கு தான் துறையூருக்கு இயக்கப்படுகிறது. இதனால் ஆலத்தூர்கேட்டிலிருந்து துறையூருக்கு இரவும், துறையூரிலிருந்து அதிகாலை ஆலத்தூர்கேட்டிற்கும் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் பயணிகள் பலரும் ஆலத்தூர் கேட்டில் இருந்து ஆட்டோ போன்ற வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்கின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி ஏற்கனவே இயக்கிய நேரத்தில் துறையூரிலிருந்து, ஆலத்தூர்கேட் வரை பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நாட்டார்மங்கலம்.


Next Story