தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்லும் குழந்தைகளையும், பெண்களையும் தெருநாய்கள் கடிக்க வருவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், விராலிமலை.
சுகாதார சீர்கேடு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சி 8-வது வார்டு திருவள்ளுவர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதியில் குப்பைகளை முறையாக அகற்றுவது இல்லை. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நித்தியன், அன்னவாசல்.
விபத்து ஏற்படும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இருந்து சித்தன்னவாசல், கூத்தினிப்பட்டி, மெய்வழிசாலைக்கு செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் ஒரு புறம் உடைந்து பள்ளமாகவும், மற்றொரு புறம் சாலையில் பெரிய பள்ளம் ஒன்றும் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக பல்வேறு பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் அடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இதனை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அன்னவாசல்.
பராமரிக்கப்படாத கண்காணிப்பு கேமராக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் பராமரிக்கப்படாமல் உள்ளதால் தற்போது ஒரு சில கேமராக்கள் செயலற்று வருகிறது. இதனால் குற்றச்செயல்கள் நடக்கும்போது குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆலங்குடி.
அடிப்படை வசதிகள் இல்லாத ரேஷன் கடைகள்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் உள்ள 2 ரேஷன் கடைகளில் பெண் விற்பனையாளர்களே உள்ளனர். இங்கு போதிய கழிவறையோ, மின்விசிறியோ கிடையாது. இதனால் இவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி.