தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ஆதனூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆதனூர்.

இணைப்பு சாலை வசதி வேண்டும்

பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் பெரம்பலூர் போலீஸ் நிலையம் அருகே இருந்து செல்லும் சாலையில் இருபுறமும் வணிக வளாகங்கள் உள்ளது. மேலும் அதனருகே உழவர் சந்தையும் உள்ளது. இதனால் அந்தப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுவதால் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே உழவர் சந்தை அருகே உள்ள இடத்தின் வழியாக காமராஜர் வளைவுக்கு செல்வதற்கு இணைப்பு சாலை ஏற்படுத்தினால் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

சிதிலமடைந்த மேற்கூரை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், பழைய விராலிப்பட்டி கிராமத்தில் உள்ள மயான கொட்டகையின் மேற்கூரை சிதிலமடைந்தும், சுற்றுச்சுவர் இடிந்தும் காணப்படுகிறது. மேலும் மயானத்திற்கு செல்லும் பாதையில் மின்விளக்கு அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலகுரு, பழையவிராலிப்பட்டி.

காந்தி சிலை முன்பு நிறுத்தப்படும் வாகனங்கள்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று நகர போக்குவரத்து போலீசார் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதனையும் மீறி வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை அந்த இடத்தில் நிறுத்தி வைத்து விட்டு கடைவீதி, காய்கறி மார்க்கெட், பஸ் நிலையத்துக்கு சென்று வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அங்கு யாரும் வாகனங்களை நிறுத்தாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story