தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Aug 2022 10:59 PM IST (Updated: 22 Aug 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

அடிக்கடி பழுதடையும் மின்மாற்றி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூர் கிராமத்தில் பூங்கா நகர் பகுதிக்கு மின் வினியோகம் வழங்கும் வரகூரில் இருந்து கொளப்பாடி செல்லும் மின் பாதையில் உள்ள மின்மாற்றியில் அடிக்கடி பழுதுஏற்பட்டு அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குன்னம்.

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு நன்றி

பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் கடந்த 1924-ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 36 ஆண்கள், 51 பெண்கள் என மொத்தம் 87 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக ஏழை-எளிய மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பள்ளிக்கு புதிய ஆசிரியை ஒருவரை நியமித்துள்ளனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

குமார்அய்யாவு, செங்குணம்.

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புது வேட்டக்குடி ஊராட்சியின் ஆதிதிராவிடர் பகுதியில் குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி சாலைகளின் இருபுறமும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாய ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கலாநிதி, புதுவேட்டக்குடி.

அரசு நிலம் ஆக்கிரமிப்பு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, மாவிலங்கை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை அந்தப்பகுதி இளைஞர்கள் பல ஆண்டுகளாக விளையாடுவதற்கு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிலர் அந்த நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மாவிலங்கை.

முகம் சுழிக்க வைக்கும் காதல் ஜோடிகள்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வளாகத்தின் பின்புறம் உள்ள பகுதி காதல் ஜோடிகளின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. அடிக்கடி அந்தப்பகுதிக்கு காதல் ஜோடிகள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் அவர்கள் அங்கு வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயல் அந்த வழியாக சென்று வருபவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதிக்கு காதல் ஜோடிகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story