தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கோவில் குளம் சுத்தம் செய்யப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலின் பின்பகுதியில் ஒரு குளம் காணப்படுகிறது. இந்த குளத்தில் தான் கோவிலுக்கு தீர்த்தம் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் தற்போது அசுத்தமாக காணப்படுகிறது. இந்த குளத்தை சுத்தம் செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கீழே கிடக்கும் அறிவிப்பு பலகை
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கடைவீதி அருகே வேகத்தடை உள்ளது மெதுவாக செல்லவும் என்பதை குறிக்கும் வகையில் இப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வேகத்தடை அறிவிப்பு பலகை கீழே விழுந்துள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் தட்டு தடுமாறி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வரத்துவாய்க்கால் அமைக்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தப்பேட்டை பெருமாள் கோவில் திடலில் வாரம் தோறும் திங்கட்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வார சந்தை திடலில் மழை பெய்ததால் தண்ணீர் செல்ல வழி ஏதுமில்லை. அருகிலேயே செட்டி ஊரணி உள்ளது. அந்த ஊரணிக்கு தண்ணீர் செல்லும் அனைத்து வரத்து வாய்க்கால்களும் அடைக்கப்பட்டு உள்ளதால் மிகப்பெரிய மழை பெய்தால் கூட அந்த ஊரணி வறண்டு கிடக்கும். வாரசந்தை நடைபெறும்போது திடீரென மழை பெய்தால் வாரசந்தை திடல் முழுவதும் தண்ணீர் தேங்கி காய்கள் தண்ணீரில் மிதந்து செல்லும். மேலும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பணம் ஆகியவை முழுமையாக நனைந்து விடுகின்றனர். ஆகவே வாரந்தோறும் அரிமளம் பேரூராட்சியில் நடைபெறும் வார சந்தை திடலில் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக வரத்துவாய்க்கால் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாலையில் தேங்கும் மழைநீர்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் மெயின் ரோட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழைநீர் சாலையில் இருந்து வெளியே செல்ல வழி இல்லாமல் குளம் போல் தேங்கிநிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலை அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
போக்குவரத்து வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து கறம்பக்குடி, மூவர் ரோடு, அங்கன்விடுதி, புதுக்கோட்டை விடுதி, ரெகுநாதபுரம் வழியாக தஞ்சாவூர் வந்து செல்லும் அரசு பஸ் காலை மட்டுமே இவ்வழியாக வந்து செல்கிறது. இவ்வழியாக வந்து செல்லும் இந்த பஸ் மாலை நேரத்தில் வருவதில்லை. இதனால் இப்பகுதி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.