தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

இரவில் மர்மநபர்கள் நடமாட்டம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் மற்றும் பாரதி நகர் பகுதிகளில் பகலில் மர்மநபர்கள் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாடி வருகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இரவு நேரங்களில் மலைக்கோவிலூர் மற்றும் பாரதி நகர் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி அலுவலத்திற்கு அருகில் வெண்ணெய்மலை மெயின் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்மாற்றி இடிந்து விழுந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அகற்றப்படாத தேசிய கொடிகள்

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் சார்பில் அவர்களின் வீடு மற்றும் தெருக்களின் முகப்பு பகுதி, கடைகள் போன்றவற்றில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சுதந்திரதினம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் பல பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் குச்சி, கம்பம் போன்றவற்றில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளது. இது நமது நாட்டின் தேசிய கொடியை அவமதிக்கும் செயலாக உள்ளது. எனவே வீடு மற்றும் தெருக்களில் ஏற்றப்பட்டுள்ள தேசியக்கொடியை அவரவர்களே அகற்றிக்கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் ஒரு அறிக்கை விடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வேலாயுதம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்றால் அருகில் உள்ள ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேலாயுதம்பாளையம் நடுநிலைப்பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயனற்றுப்போன பயணியர் நிழற்குடை

கரூர் மாவட்டம், சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தவுட்டுப்பாளையத்தில் மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சர்வீஸ் சாலை அருகே இருந்த நிழற்குடையை சர்வீஸ் சாலை அருகே செடி-கொடிகள் முளைத்துள்ள பகுதியில் வைத்துள்ளனர். இதனால் அந்த நிழற்குடையின் அடியில் யாரும் சென்று அமர முடியாதபடி உள்ளது. மேலும் அந்த இடம் சேரும், சகதியாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story