தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

சாலைகளை சீரமைக்க வேண்டும்

திருச்சி நகர பகுதிகளான உறையூர், தில்லை நகர், புத்தூர் மிக முக்கிய பகுதிகளாக உள்ளன. இந்த பகுதிகளில் சில மாதங்களாக நடைபெறும் பல பணிகளின் காரணமாக இந்தப்பகுதிகளிலுள்ள எல்லா சாலைகளும் சிதிலமடைந்து உள்ளதால் இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். முதியவர்கள் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

திருச்சி வார்னஸ் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. காற்று வீசும்போது குப்பைகள் பறந்து சாலைக்கு வந்து விடுகின்றன. மேலும் மழைக்காலமாக இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகள் மட்டுமின்றி நகர் முழுவதும் குப்பைகளை தினசரி அகற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, பெட்டவாய்த்தலை திருமுருகன் நகரில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் வடக்குத் தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும் போது மழைநீர் வெளியேற வழிஇன்றி மழைநீரும், கழிவுநீரும் ஒன்றாக கலந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், மாராடியிலிருந்து பாலகிருஷ்ணம்பட்டி செல்லும் குறுக்கு சாலையில் தோட்டங்களில் உள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள், மிகவும் சாய்ந்த நிலையிலுள்ளன. மின்வாரிய ஊழியர்களிடம் பலமுறை புகாரளித்தும் பயனில்லை. மழை காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களை தவிர்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

திருச்சி கண்டோன்மெண்ட் வார்னர்ஸ்ரோட்டில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் உள்ளது. இதன் அருகிலேயே தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸ் நிலையமும் உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகே விபத்து வழக்கில் சிக்கிய கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த கார் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், கார் மீது செடி, கொடிகள் படர்ந்து காரே தெரியாத அளவுக்கு மறைத்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பாரதிதாசன் சாலையில் இருந்து போலீஸ் அதிகாரிகள் கிளப் வழியாக வரும் வாகனங்கள் வார்னஸ்ரோட்டில் வலதுபுறமாக திரும்பும்போது, இந்த செடி, கொடிகள் ஒருபக்கம் மறைத்து விடுகிறது. இதனால் அந்த வளைவில் திரும்பும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸ் நிலைய கட்டிட சுவரையொட்டி படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story