தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நீதிமன்றம் அமைக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் வழக்குகள் சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆண்டிமடத்தில் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சட்ட விரோத செயல்கள் தடுக்கப்படுமா?
அரியலூர் காமராஜர் திடலை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நுழைவாயிலில் கேட்டு வசதி அமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் மது அருந்துவதும், மர்மநபர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் தொடர் கதையாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காமராஜர் திடலின் நுழைவு வாயிலில் கேட் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அகற்றப்படாத லாரி
அரியலூர் அரசு பெருந்திட்ட வளாகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட காவல் துறை அலுவலகம் இருந்தது. அப்போது ஒரு வழக்கிற்காக பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஒன்று அங்கு நிறுத்தப்பட்டது. காவல்துறை அலுவலகம் ஒரு ஆண்டுக்கு முன்பு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி அதே இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. அதில் உள்ள பல பொருட்களை இரவில் மர்மநபர்கள் திருடி வருகின்றனர். மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு நிற்கும் இந்த லாரியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் எந்நேரமும் மது பிரியர்கள் மதுபாட்டுகளை வாங்கிக்கொண்டு இரவு நேரங்களில் அப்பகுதியில் பூட்டப்பட்டிருக்கும் கடைகளின் முன்பு அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை கடையின் முன்பு உடைத்துச்செல்வதும், தின்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே போட்டுவிட்டும் செல்கின்றனர். ஒரு சிலர் போதை தலைக்கேறிய நிலையில் கடையில் முன்பு படுத்து தூங்கு கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டி
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், விக்கிரமங்கலம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டியின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.