தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பள்ளி கட்டிடம் கட்டித்தர கோரிக்கை
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக கட்டிடம் சிதிலமடைந்து மழைநீர் வகுப்பறைக்குள் ஒழுகியதாலும், கட்டிடம் ஆபத்தான நிலையில் இருந்ததாலும் கட்டிடத்தை இடித்து புது கட்டிடம் கட்டித்தர மாணவிகளின் பெற்றோர்கள் பல முறை கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த கட்டிடத்தை முழுவதும் இடித்துவிட்டனர். ஆனால் அந்த பள்ளி கட்டிடத்தின் அறையில் பயின்று வந்த மாணவ- மாணவிகளுக்கு படிப்பதற்கு உரிய கட்டிடம் இல்லாததால் ஆசிரியர்களின் முயற்சியால் மாணவ-மாணவிகள் தோட்டக்குறிச்சியில் உள்ள இரு சமுதாயக் கூடங்களை பள்ளி வகுப்பறையாக மாற்றி படித்து வருகின்றனர். இந்நிலையில் இடித்து சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பள்ளி கட்டிடம் இடித்த நிலையிலேயே உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தானே புதிய கட்டிடத்தை கட்டி தருவதாக கூறியும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் சமுதாயக்கூடத்தில் இடம் பற்றாக்குறையாக இருப்பதால் அங்குள்ள மரத்தடியில் மாண
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூரில் இருந்து செல்வநகர் செல்லும் தார் சாலை ஓரத்தில் மின் கம்பங்கள் நடப்பட்டு அந்த வழியாக மின்கம்பிகள் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு கம்பிகள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் பெரிய வாகனங்கள் இந்த வழியாக செல்லும்போது மின் கம்பிகள் உரசும் சூழல் உள்ளது. எனவே தாழ்வாக உள்ள மின்கம்பியை சீரமைக்க சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குண்டும், குழியுமான தார்சாலை
கரூர் மாவட்டம், புஞ்சைகடம்பங்குறிச்சி ஊராட்சி, பெரியவரத்துப்பாளையம் பகுதியிலிருந்து ஊராட்சி அலுவலகம் வரை சுமார் 2 கி.மீ. வரை உள்ள தார் சாலை சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிக்குள் வரும் லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்கிறது. இதனால் அரவக்குறிச்சி நகரப்பகுதிக்குள் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அரவக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் முன்பு வேகத்தடை அமைத்தால் அனைத்து வாகனங்களும் வேகத்தை குறைத்து செல்ல வழிவகுக்கும். எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கி அமைக்கப்படுமா?
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூர் ஆகிய 3 கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இங்கிருந்து வங்கிக்கு செல்ல வேண்டும் என்றால் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தரகம்பட்டிக்கோ அல்லது 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடவூருக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு ஒரு நாள் ஆகி விடுகிறது. இப்பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் 100 நாள் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதனால் இவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலவிடுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.