தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

வரத்துவாரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்

அரியலூர் அய்யப்பன் ஏரிக்கு அருகே செல்லும் சித்தேரி வரத்து வாய்க்காலில் அதிகளவிலான ஆகாயத்தாமரைகள் முளைத்துள்ளதால், மழை பெய்யும்போது தண்ணீர் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சித்தேரி வரத்து வாய்க்காலில் முளைத்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சீரமைக்கப்படாத மகளிர் சுகாதார மையம்

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள காலனி தெருவில் மகளிர் சுகாதார மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மகளிர் சுகாதார மையம் சீரமைக்கப்படாமல் பயனற்று காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரப்படாத கல்லாறு

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி ஊராட்சி ஆனந்தவாடியில் செல்லும் கல்லாற்றில் கருவேல மரங்கள் மற்றும் செடி, கொடிகள் அதிக அளவில் முளைத்துள்ளதாலும், தூர்ந்துபோன நிலையில் காணப்படுவதாலும் கனமழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழி இன்றி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இதனால் விளைபயிர்கள் நாசமாவதால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கல்லாற்றை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிழற்குடையின்றி மாணவர்கள் அவதி

அரியலூர்- ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பெரிய நாகலூர் பாதை. பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் இந்த பாதைக்கு வந்து அரசு பஸ்களில் ஏறி அரியலூருக்கு சென்று படித்து வருகின்றனர். ஆனால் மேற்படி பாதையில் இரு புறமும் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் நீண்ட நேரமாக மாணவர்கள் பஸ்களுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

அரியலூரில் இருந்து தஞ்சாவூர் வரை அதாவது வி.கைகாட்டி மற்றும் முனியங்குறிச்சி, பெரியதிருக்கோணம், சுண்டகுடி ஏலாக்குறிச்சி, திருமானூர் வழியாக அரசு பஸ் ஒன்று காலை நேரத்தில் இயங்கி வந்தது. இந்த பஸ்சில் பெரும்பாலுமான கிராம மக்கள் தினமும் அரியலூருக்கு கூலி வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என அனைவரும் சென்று வந்தனர். இந்த நிலையில் இந்த பஸ் எவ்வித காரணமுமின்றி கடந்த 2020-ம் ஆண்டிற்கு முன்பே மேற்படி தடத்தில் இயங்காமல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து தினமும் இரவு 7:20 மணிக்கு அரசு பஸ் ஒன்று தூத்தூர் வரை இயங்கி வந்தது. இந்த பஸ்சில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பும் பொதுமக்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தது. இந்த அரசு பஸ்சும் எவ்வித காரணமுமின்றி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story