தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தூர்ந்துபோன கழிவுநீர் வாய்க்கால்
திருச்சி மாவட்டம், சங்கிலியாண்டபுரம் நாகம்மை தெரு தாவுத் பள்ளிவாசல் அருகில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் காலப்போக்கில் தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மூடப்பட்டுள்ள சிவாஜி சிலை
திருச்சி மாவட்டம், பாலக்கரை ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலை கடந்த 12 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இது தமிழகம் மற்றும் திருச்சி சிவாஜி ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலம் சேதமடையும் அபாயம்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், சோபனபுரம் ஊராட்சியில் ஓசரப்பள்ளி கிராமம் உள்ளது. பச்சமலையில் இருந்து காட்டாறு ஓசரப்பள்ளி வழியாக ஒக்கரை ஏரிக்கு சென்று அடைகிறது. ஓசரப்பள்ளி செல்லும் சாலை ஓரமாக ஆறு வருகிறது. நடு ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் முளைத்துள்ளதால் காட்டாற்று வெள்ளம் வரும்போது தண்ணீர் செல்ல வழியின்றி ஓசரப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள பாலம் சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மது விற்பனையை கண்டுகொள்ளாத போலீசார்
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள வலையூரில் பஸ் நிறுத்தத்தின் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இப்பகுதி வழியாக பள்ளி மாணவ-மாணவிகள், அரசு அதிகாரிகள்,பொதுமக்கள்,விவசாயிகள் என்று பலதரப்பட்ட மக்களும் அதிக அளவில் சென்று வருகின்றனர்.இந்நிலையில், அதிகாலை நேரம் மற்றும் இரவு 10 மணிக்கு மேலும் கள்ளத்தனமாக மது விற்கப்படுவதால் எப்போது சென்றாலும் மது கிடைக்கும் என்ற எண்ணத்தில் மது பிரியர்கள் அங்கே வந்து மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டு செல்கின்றனர். இதனால்,அவ்வழியே செல்லும் மாணவ, மாணவிகள், அரசு அதிகாரிகள், பெண்கள், உள்ளிட்டோர் அருவருப்புடனும், அச்சத்துடனும் செல்கின்றனர். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, போலீஸ் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தடையின்றி நடக்கும் லாட்டரி விற்பனை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு ரோடு, மார்க்கெட், சமயபுரம் செல்லும் சாலை, திருப்பைஞ்சீலி, திருவெள்ளறை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் குக்கிராமங்களிலும் தடை இன்றி லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இதுகுறித்து அவ்வப்போது போலீசார் பெயரளவிற்கு வழக்குப்பதிவு செய்கின்றனர். இருப்பினும் தொடர்ந்து வியாபாரிகள் லாட்டரி விற்பனையை தடையின்றி நடத்தி வருகின்றனர். லாட்டரி மோகத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில், பல கூலித்தொழிலாளிகள் தினசரி தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி வாங்கி செலவழித்து வருகின்றனர். இதன் காரணமாக பல குடும்பங்கள் அவதியுற்று வருகிறது. இதன் காரணமாக சில பேர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். எனவே, போலீஸ் உயரதிகாரிகள் கண்டிப்புடனும், தீவிரமாக கண்காணித்தும் லாட்டரி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.