தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

திருச்சி ஏர்போர்ட் பாரதி நகர் சாலையில் தினசரி வீடுகள் தோறும் மாநகராட்சி சார்பில் குப்பைகள் பெற்றுச்செல்லாததால், வீடுகளில் தேக்கமடைந்த குப்பைகளை வீடுகளுக்கு அருகிலேயே சாலையில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாதவாறு துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெயர்பலகைகள் வைக்க வேண்டும்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள புளியஞ்சோலை, பச்சைமலை ஆகியவை திருச்சி மாவட்டத்திலுள்ள மனம்கவரும் சுற்றுலா தலங்களாகும். இவைகளுக்கு செல்ல, பக்கத்து மாவட்டங்கள், வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் வழி தெரியாமல் தடுமாறுகிறார்கள். அதனால் இந்த இடங்களுக்கு செல்லும் முருகூர் பிரிவு சாலை, உப்பிலியபுரம் பிரிவு சாலை, கொப்பம்பட்டி பிரிவு சாலைகளில் வாகனங்களில் வருபவர்களுக்கு தெரியும் வகையில் பெயர்பலகைகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்களால் கீழே விழும் வாகன ஓட்டிகள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சி.அய்யம்பாளையம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி, தெரு நாய்கள் மீது வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிக்க வருவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி பாரதியார் சாலையில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் ஒருசிலர் அவ்விடத்தில் சிறுநீர் கழிப்பதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அகலப்பாதை விட கோரிக்கை

திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது மாத்தூர் தென்னம்பிள்ளை பஸ் நிறுத்தத்தில் இருந்து திருச்சி விமான நிலையம் வரை சாலையின் நடுவில் சுவர் எழுப்பி வருகிறார்கள். தற்போது குண்டூர் பர்மா காலனியில் சுமார் 3,000 மக்கள் வசிக்கிறார்கள் அவர்களுக்கு கிழக்கிலிருந்து மேற்கிலும் குண்டூர் பர்மா காலனி பழைய பஸ் நிறுத்தம் அருகில் 15 அடி அகலப்பாதை விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story