தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா?

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போகிறது. எனவே வாகனங்களை திருட்டை தடுக்க வளாகத்தில் முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலம் கட்டி தர வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அய்யர்பாளையம் காட்டு கொட்டாயில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகளின் வயல்கள் செம்மண்குட்டையில் உள்ளது. அங்கு செல்ல வேண்டும் என்றால் வக்கனாபுரி ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். தற்போது ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் விளை பொருட்களையும், பால் உற்பத்தியாளர்கள் கறந்த பாலையும் ஆற்றை சிரமத்துடன் கடந்து அய்யர்பாளையத்துக்கு கொண்டு வருகின்றனர். இல்லையென்றால் அ.மேட்டூர், விஜயபுரம் சென்று அய்யர்பாளையத்துக்கு சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் சிரமத்துடன் ஆற்றை கடந்து அய்யர்பாளையத்துக்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே கலெக்டர் அய்யர்பாளையம் வக்கனாபுரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி தர தமிழக அரசை வலியுறுத்த வேண்டுகிறோம்.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கிழுமத்தூர் கிராமம் தெற்குதெருவிலுள்ள அங்கன்வாடி மையத்தின் சுற்று புறத்தில், இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவதாலும், இப்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதனாலும் இப்பகுதி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் அவதி

பெரம்பலூர் ஒன்றியம் , செங்குணம் ஊராட்சியில் செங்குணம், அருமடல், பாலாம்பாடி, சறுக்குபாலம் பகுதிகளை சேர்ந்த 1,474 குடுங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தனிநபர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் பகுதி வாரியாக குறிப்பிட்ட நபர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழகிழமை முதல் அடுத்த புதன்கிழமை வரை 100 நாட்கள் திட்ட வேலை வழங்கப்பட்டு வருகிறது. 100 நாட்கள் திட்ட வேலையில் ஈடுபடும் நபர்களை நாள்தோறும் காலை 6 மணிக்கு செங்குணத்தில் பெரிய ஏரிக்கரைக்கும், அருமடல் சறுக்குபால பகுதிக்கு இடையில் உள்ள வாட்டர் டேங்கிற்கும் வரச்சொல்லி வருகை பதிவிற்காக பணிதள பொறுப்பாளர்களால் எம்.எம்.எஸ் போட்டோ எடுக்கப்படுகிறது. இதனால் காலையில் சமைப்பது, தண்ணீர் எடுப்பது , குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பது, இயற்கை உபாதைகளை கழிப்பது உள்ளிட்ட சிரமங்கள் பணியாளர்களுக்கு ஏற்படுகிறது. எனவே பழைய வழக்கப்படி வேலை நடைப்பெறும் இடத்தில் எம்.எம்.எஸ். போட்டோ சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

வாகன ஓட்டிகள் அவதி

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதினால் வாகன ஓட்டிகள் சாலையில் எவ்வளவு பெரிய பள்ளம் உள்ளது என்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story