தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

குடிநீர் குழாயில் உடைப்பு

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே திண்டுக்கல்- திருச்சி மத்திய பஸ் நிலையம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் நடுவே தண்ணீர் ஓடுகிறது. இதனால் தார்சாலை சேதம் அடைந்து வருவதுடன், ஏராளமான தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், சிறுநாவலூர் ஊராட்சியில் உள்ள எஸ்.என்.புதூரில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையில் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாதாள சாக்கடை மூடி வழியாக வெளியேறும் கழிவுநீர்

திருச்சி வி.என்.நகர் பகுதியில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்து அதன் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எலும்பு கூடான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, பெட்டவாய்த்தலை அருகே உள்ள திருமுருகன் நகர் பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சிகள் உதிர்ந்து எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கிறது. இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கலங்கலாக வரும் குடிநீர்

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெட்டவாய்த்தலை ஊராட்சி பழங்காவேரி அண்ணா நகர், சேரன் நகர், பாரதி நகர், வைகோ நகர், திருமுருகன் நகர், சோழவந்தான் தோப்பு, காவேரி நகர், காமன் நாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வினியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் கலங்கலாக வருகிறது. ஆகையால் ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story