தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

வாகன ஓட்டிகளை கடிக்க வரும் தெருநாய்கள்

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனம் ஓட்டுகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்திற்கு இடையூறு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் உள்ள சாலைகளில் சோளம், நெல், வைக்கோல், எள் உள்ளிட்டவற்றை காய வைப்பதாலும், கால்நடைகளை கட்டுவதாலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் அந்தந்த பகுதிகளில் விவசாயிகள் பயன்பெரும் வகையில், உலர் களம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்கள்

அரியலூர் கீரைக்கார தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் சாலையின் நடுவில் 2 மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. அந்த கம்பங்களை அகற்றி தருமாறு நகராட்சி, மின்சாரத்துறை அலுவலகங்களில் அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் பலமுறை புகார் அளித்துள்ளனர். அங்கு வசிக்கும் வீடுகளில் நடைபெறும் சுக, துக்க நிகழ்ச்சிகளுக்கும், கட்டுமான பணிகளுக்கும் ஒரு சிறிய லாரி கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. சிமெண்டு மின்கம்பம் 20 ஆண்டுகளுக்கு முன்பே நடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரும்பு கம்பம் நடும்போது சாலையின் ஓரத்தில் நட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதை பொருட்படுத்தாமல் 2-வது கம்பத்தையும் சாலையின் நடுவில் நட்டு பணிகளை முடித்துள்ளனர். இந்த இரு கம்பங்களையும் அகற்றிதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அரசு டவுன் பஸ் இயக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கோட்டியால் கிராம பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். தினமும் கல்லூரி செல்வதற்காக அவர்களை தா.பழூர் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தின் உதவியுடன் கொண்டுவந்து பஸ்சில் அனுப்பி வைக்கின்றனர். இதனால் அவப்போது விபத்து ஏற்படுகின்றது. மேலும் தற்போது பருவமழை காலம் என்பதால் இருசக்கர வாகனத்தில் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. எனவே எங்கள் பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான கும்பகோணம் முதல் சுத்தமல்லி வரை தா.பழூர் வழியாக டவுன்பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டிக்கு தெற்கே பெரிய திருக்கோணம் செல்லும் முதன்மை சாலையில் அமைந்துள்ளது சேலத்தான்காடு, மங்கட்டான் கிராமங்கள். இந்த கிராமத்தில் சாலையின் ஓரப்பகுதியில் ஏரி ஒன்று உள்ளது. மு.புத்தூர் கிராமத்தில் இயங்கும் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து 24 மணி நேரமும் அசுர வேகத்தில் சுண்ணாம்புக்கல் எடுத்துச் செல்லும் லாரிகள் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் ஏற்படுத்தும் விதமாக சென்று வருகிறது. சில சமயங்களில் கரையில்லாத ஏரியின் அருகே எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டிகள் வழி விட்டு ஒதுங்கி நிற்கும்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரிகளும் ஏரிக்குள் சென்று விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு மேற்படி ஏரியின் ஓரப்பகுதியில் தெற்கு பகுதியில் மட்டுமே பெயரளவிற்கு தடுப்பு சுவர் பாதியளவு மட்டுமே அமைத்துள்ளனர். வடக்கு பகுதியில் (ஆபத்தான வளைவு) எவ்வித தடுப்பு சுவரும் அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story