தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

வீடின்றி தவிக்கும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள அனவயல் எல்.என்.புரம் சுக்கிரன்குண்டு பகுதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியநிலையில் சுமார் 100 குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்க உரிய வீடின்றியும், இடமின்றியும் தவித்து வருகின்றனர். தங்களுக்கு உரிய இடம் மற்றும் வீடு போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம் முனசந்தை ஊராட்சி முனசந்தை கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்படுகின்றது. இங்கே விளைவிக்கப்படும் நெல்மணிகளை அரசிடம் விற்பனை செய்வதற்காக 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் கால விரியமும், போக்குவரத்து செலவும் அதிகம் ஏற்படுகின்றது . ஆகவே முனசந்தை ஊராட்சி பகுதியில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாதியில் நிற்கும் நீர்த்தேக்க தொட்டி பணி

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பரமன்நகர் பகுதியில் பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஜல்சீவன் திட்டத்தின் மூலமாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கட்டுமான பணி முழுமையாக நிறைவு பெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சுமார் ஓராண்டை கடந்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி தொடங்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு பகுதியில் உள்ள விசாலாட்சி நகரில் குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே பல காலி இடங்கள் உரிமையாளர்களின் கவனிப்பு இன்றி மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது. மேலும் இங்குள்ள காலி இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதில் பன்றி, பாம்பு போன்றவை காணப்படுகிறது. இதனால் விசாலாட்சி நகர் மக்கள் நோய்க்கு ஆளாகி சிரமப்படுகின்றனர். மேலும் டெங்கு பரவும் அபாயமும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நகராட்சி ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் பயணிகள் அவதி

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாக கொத்தமங்கலம் வரை அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. ஆனால் சில நேரங்களில் இந்த பஸ் ஆலங்குடி பஸ் நிறுத்தத்திற்கு வராமல் வடகாடு முக்கம் வழியாக நேராக கொத்தமங்கலம் சென்று விடுகிறது. தனியார் பஸ்களும் இதனையே கடைபிடிக்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story