தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மலைக்குடிப்பட்டியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசி வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகேயுள்ள அனவயல்எல்.என்.புரத்தில் சுமார் 7 ஆயிரம் பேர் வரை வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியின் பணிகள் யாவும் தற்சமயம் கிராம சேவை மையக்கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.மேலும் 1981-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் தற்சமயம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஊர்ப்புற நூலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. 41 ஆண்டுகள் பழமையான கட்டிடமான இக்கட்டிடமும் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்து வருகிறது. இக்கட்டிடத்தில் மழை நேரங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு பல முக்கிய ஆவணங்கள் சேதமடைந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்றவும், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இல்லாத ஊராட்சியாக இருந்து வரும் அனவயல் எல்.என்.புரம் ஊராட்சிக்கு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைத்து தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம் அனவயல் எல்.என்.புரம் ஊராட்சியில் செங்கொல்லை,குளக்காரன்தெரு, மெயின்ரோடு பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 40 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் யாவும் துருப்பிடித்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதனை இடித்து அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய நீர்த்தேக்கத்தொட்டி அமைத்து தர வேண்டும் என்ற கேட்டுக்கொள்கிறோம்.

மாலை நேரங்களில் டவுன் பஸ் இயக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மேற்பனைக்காடு, சொர்ணக்காடு, மணக்காடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினசரி டவுன் பஸ்சில் வந்து செல்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பஸ் மட்டுமே வந்து செல்வதால் மாலை நேரத்தில் மாணவ, மாணவிகள் பஸ்சில் ஏற முடியாமல் படிகளில் தொங்கி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி மாலை நேரத்தில் கீரமங்கலம் முதல் மணக்காடு வரை டவுன்பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆபத்தை ஏற்படுத்தும் கட்டிடம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்கடைவீதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகில் மிகவும் பழமை வாய்ந்த அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் பாழடைந்து காணப்படுகின்றது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ள இந்த ஆபத்தான அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடத்தை இடிக்க கூறி பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story