தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

குறுகிய பாலத்தால் விவசாயிகள் அவதி

கரூர் மாவட்டம், முனிநாதபுரத்தில் உள்ள புகழூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்து செல்வதற்காகவும், இருசக்கர வாகனங்கள் செல்வதற்காகவும் சிறிய அளவிலான பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக விவசாயிகள், பொதுமக்கள், பக்தர்கள் காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள முனியப்பசாமி கோவிலுக்கு சென்று வருகின்றனர். சிறிய பாலமாக இருப்பதால் விவசாயிகள் தங்களது இடுப்பொருட்களையும், விளைபொருட்களையும் இந்த பாலத்தின் வழியாக நான்கு சக்கர வாகனங்களில் எடுத்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குறுகிய பாலத்தை அகலப்படுத்தி கட்டி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார் சாலை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து நானப்பரப்பு வரை செல்லும் சாலை சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மாணவ-மாணவிகளுக்கு ஏமாற்றம்

கரூர் மாவட்டம் புகழூரில் காகித ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் வெளிப்புறத்தில் நோட்டுகள் மற்றும் பேப்பர்கட்டுகள் நேரடி விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நோட்டுகள், பேப்பர்கள் விற்பனை செய்யப்படும் என அறிவித்துவிட்டு எப்பொழுது சென்று கேட்டாலும் எந்த ஒரு நோட்டும், பேப்பரும் இல்லை என்று மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் கூறிவருகின்றனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனம் தமிழநாடு காகித ஆலை நிறுவனம் எனக்கூறி வரும் இந்த நிலையில் இதுபோல செயல்படுவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது. பொதுமக்கள், மாணவ- மாணவிகளுக்கு பேப்பர்கள், நோட்டுகள் இல்லை என்று சொல்லி வருவது அவர்களுடைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பொதுமக்களுக்காக செயல்படும் இதுபோன்ற இடங்களில் அனைத்தும் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் வழிவகை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

செடி, கொடிகளை அகற்ற கோரிக்கை

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள ஒரம்புப்பாளையம் பகுதியிலிருந்து கவுண்டன்புதூர், சேமங்கிசெல்வநகர் வழியாக முத்தனூர் வரை விவசாயநிலங்களில் பாய்ச்சப்படும் தண்ணீர் வெளியேறி செல்லும் வகையில் உபரிநீர் கால்வாய் வெட்டப்பட்டது. அந்த கால்வாய் மூலம் உபரி நீர் சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் உபரி நீர் கால்வாயில் நெடுகிலும் ஏராளமான செடி, கொடிகள், சம்புகள் முளைத்து கால்வாயில் தங்குதடையின்றி உபரிநீர் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உபரிநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நானபரப்பு அருகே உடைந்த நிலையில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சிதிலமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்து வெளியிடப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் நட்டனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story