தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் பரவும் மண்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் புங்கம்பாடி ரோடு எஸ்.பி. நகர் அருகில் தார் சாலையோரத்தில் உள்ள மண் சரிந்து ரோடு முழுவதும் பரவி கிடக்கின்றது. இதனால் அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் செல்வோர் சில நேரங்களில் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே நத்தமேடுப்பாளையத்திலிருந்து கோம்புப்பாளையம் செல்லும் புகழூர் வாய்க்கால் மேட்டில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலை போடப்பட்டது. அடிக்கடி பெய்துவரும் மழையின் காரணமாக மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த மண்சாலை வழியாக விவசாயிகள் இடுபொருட்களையும், விளைபொருட்களையும் கொண்டு சென்று வருகின்றனர். இந்நிலையில் மண் சாலை தொடர் மழையின் காரணமாக குண்டும், குழியுமாக உள்ளதால் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிய நிழற்குடை
கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலையில் பரமத்தி வேலூர் செல்லும் பிரிவு சாலை அருகே பயணிகளின் நலன் கருதி பயனியர் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் பஸ் நிறுத்தத்தில் இருந்து சற்று தொலைவில் கட்டப்பட்டதால் அங்கு பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பஸ்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் நிற்கும் இடத்திற்கே சென்று பயணித்து வருகின்றனர். இதனால் இந்த பயணிகள் நிழற்குடையை மதுப்பிரியர்கள் மது அருந்த பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த வழியாக இரவு நேரங்களில் பெண்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாலையை சீரமைக்க கோரிக்கை
ஈரோடு -கரூர் செல்லும் சாலையில் உள்ள குட்டைக்கடை அருகில் இருந்து தண்ணீர் பந்தல் செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மெயின் ரோட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள ஒரு இடத்தில் தனியாருக்கு சொந்தமான காங்கிரீட் கலவை தயார் செய்யும் இயந்திரம் வைக்கப்பட்டு அங்கு கான்கிரீட் கலவைகள் தயார் செய்யப்பட்டு அங்கிருந்து ஆர்டரின் பேரில் லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அடிக்கடி காங்கிரீட் கலவைகளை அதிக பாரத்துடன் ஏற்றுக்கொண்டு லாரிகள் சென்று வருவதால் சாலைகள் மிகவும் பழுதடைந்து நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலை மிகவும் மோசமான சாலையாக மாறி உள்ளது. இந்த சாலை வழியாக நடந்தும், இரு சக்கர வாகனத்திலும் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பக்தர்களை அச்சுறுத்தும் மின்மாற்றி
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி செங்காட்டில் ஸ்ரீரெணகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பு மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் திருவிழா நாட்களிலும், சிறப்பு அபிஷேகம் நடைபெறும் போதும் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் ஒன்று கூடும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கோவில் முன்பு மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.