தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தார்ச்சாலையை புதுப்பிக்க கோரிக்கை
புதுக்கோட்டையில் நகர போக்குவரத்து போலீஸ் அலுவலகம் உள்ள சத்தியமூர்த்தி சாலையில் இருந்து தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு செல்லக்கூடிய தார்ச்சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை வழியாக கோர்ட்டு, பத்திரப்பதிவு துறை அலுவலகங்களுக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். தார்ச்சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கோவனூர் ஊராட்சியில் உள்ள மேக்கினிப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் நல குடியிருப்பு பகுதியில் பொதுப்பயன்பாட்டில் உள்ள இடங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தெருநாய்களால் பொதுமக்கள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கடைவீதி, புதிய பஸ் நிலையம், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். ஒரு சில நேரங்களில் திடீரென நாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் சுற்றித்திரிவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கூட்டமாக வரும் நாய்கள் சில நேரங்களில் வீட்டில் வளர்க்கக்கூடிய கோழிகளை கடித்து கொன்றுவிடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்திலிருந்து திருமயத்திற்கு செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் மிக குறைந்த அளவே இயக்கப்படுகின்றது. தாசில்தார் அலுவலகம், பத்திர பதிவுத்துறை, நீதிமன்றங்கள், தீயணைப்புத்துறை, நில அளவையர் துறை, மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காக அரிமளம் பொதுமக்கள் மற்றும் பெண்கள் திருமயம் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் ப.அரிமளத்தில் இருந்து திருமயத்துக்கு மிக குறைந்த அளவே பாஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்சிற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தங்களுடைய வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
காணாமல்போன செங்குளம்
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் உள்ள பெரியகுளங்களில் ஒன்று செங்குளம். இந்த குளம் ஆக்கிரமிப்புகளாலும், முறையாக பராமரிக்காததாலும் தற்போது இருந்த இடம் தெரியாமல் மதுப்பிரியர்களின் கூடாரமாகவும், பஸ் நிறுத்தத்திற்கு பெயராகவும் மட்டுமே உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.