தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

கண்ணை பறிக்கும் அறிவிப்பு பலகை

அரியலூர் மாவட்டம், சின்ன வளையம் அருகில் திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீன்சுருட்டி பகுதியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வரும்போது சின்னவளையம் மேம்பாலத்திற்கு முன்னதாக எல்.இ.டி. அறிவிப்பு பலகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகை பழுதடைந்த நிலையில் கடுமையான வெள்ளை ஒளியை உணர்ந்து வருகிறது. இதனால் மீன்சுருட்டி பகுதியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வரும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கண் கூச்சத்தால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை உடனடியாக சரி செய்து பெரும் விபத்தை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வெள்ளை வர்ணம் பூசப்படாத வேகத்தடை

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் அருகே உள்ள முனியங்குறிச்சி கிராமத்தில் சாக்கடை கால்வாய் அமைத்தும் சாலையின் உயரத்தை அதிகப்படுத்தி சாலை அமைந்துள்ளனர். இந்த சாலையில் ரேஷன் கடை அருகிலும், தெற்கு தெரு பகுதியில் 2 பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ளன. இந்த பள்ளி மாணவர்களுக்கு இவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி வேகத்தடைகளில் இதுவரை வெள்ளை வர்ணம் பட்டைகளோ மேலும் வேகத்தடை உள்ளதற்கான அறிவிப்பு பலகையும் ஏதும் அமைக்கவில்லை. இதனால் இவ்வழியே புதிதாக வருபவர்கள் அடிக்கடி வேகத்தடையில் விழுந்து காயம் அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் வசதி வேண்டும்

அரியலூர் முதல் முசிறி, காடுவெட்டி மற்றும் திருப்பூர் வழியாக பொள்ளாச்சி, மருதமலை, பழனி, கன்னியாகுமரி, திருச்செந்தூர் மற்றும் ராமேசுவரம் ஆகிய ஊர்களில் உள்ள புன்னிய திருத்தலங்களுக்கு சென்று வர நேரடி பஸ் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தா.பழூர் பிர்கா கூத்தங்குடி கிராமத்தில் உள்ள பொன்னாறு கரையோர பகுதி மக்கள் கரையோர பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் மழை பெய்யும் போது இந்த ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாமல் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நோய் தொற்று ஏற்படும் அபாயம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகில் தெரு நாய்கள் அதிக அளவு சுற்றித்திரிகின்றன. இவற்றில் ஒரு நாய்க்கு மட்டும் உடம்பில் அதிகமாக புண்கள் உள்ளன. அந்த புண் அழுகிய நிலையில் உள்ளதால் அவற்றிலிருந்து எல்லா நேரமும் ரத்த வடிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story