தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

அடிப்படை வசதிகள் வேண்டும்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள கீழப்பழுவூர் ஊராட்சி அருணாசலம் நகரில் அமைந்துள்ள அனைத்து தெருக்களிலும் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் தார்சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குளமாக மாறி சாலை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, அழகாபுரம் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளம் உள்ளதால் தற்போது பெய்த மழைநீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகிலும், தெற்கு தெரு பகுதியிலும் 2 பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ளன. இந்த பள்ளி மாணவர்களுக்காக இப்பகுதியில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாத நிலையில் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூசினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேற்கூரை இல்லாத கோவில் மண்டபம்

அரியலூர் மாவட்டம், காசான்கோட்டையில் உள்ள சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் முன் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மண்டபத்தில் அமர்ந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் காலப்போக்கில் இந்த மண்டபத்தின் மேற்கூரை சிதிலமடைந்து முற்றிலும் உதிர்ந்து விட்டது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மண்டபத்தில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மணல் குவாரியை நிறுத்த கோரிக்கை

பெரம்பலூர் அருகே சிலுப்பனூர் பகுதியில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரி மூலம் பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தஞ்சாவூர், உட்பட பல்வேறு மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் கிராமங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் தினசரி 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திட்டக்குடி அருகே கொடிக்களம் மெயின் ரோட்டில் வாகனங்களை பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தி கொண்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தினமும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட லாரியின் மூலம் மணல்கள் ஏற்றி செல்லப்படுகிறது . இதனால் கடலூர் மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டம் இடையில் ஆற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story