தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

கரூர் மாவட்டம், குளித்தலை கிளை நூலகத்தில் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ள டெலிபோன் கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த கம்பத்தை அப்புறப்படுத்தினர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், சி.கூடலூர் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளியம் பாளையம் பிரிவு அருகே பச்சாங்காடு என்னும் இடத்தில் ஆதிதிராவிட நலத்துறைபின் மூலம் பட்டியல் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு மக்கள் குடியேறி வருகின்றனர். இந்த நிலையில் நான்கு வீதிகளின் முன்பகுதியில் தெருவிளக்கு வசதியில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மோசமான சாலையால் கீழே விழும் வாகன ஓட்டிகள்

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், புன்னம்சத்திரம் ஊராட்சியில் உள்ள புன்னம்சத்திரம்- டி.என்.பி.எல். செல்லும் சாலையில் 3 இடங்களில் சாலைகள் மிகவும் மேசமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரப்படாத கால்வாய்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள ஓரம்புப்பாளையம் பகுதியிலிருந்து கவுண்டன்புதூர், சேமங்கிசெல்வநகர் வழியாக முத்தனூர் வரை விவசாயநிலங்களில் பாய்ச்சப்படும் தண்ணீர் வெளியேறி செல்லும் வகையில் உபரிநீர் கால்வாய் வெட்டப்பட்டது. அந்த கால்வாய் மூலம் உபரி நீர் சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் உபரிநீர் கால்வாய் நெடுகிலும் ஏராளமான செடி, கொடிகள், சம்புகள் முளைத்து கால்வாயில் தங்குதடையின்றி உபரிநீர் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே குறுக்கு சாலை வழியாக நொய்யல் ஆறு செல்கிறது. குறுக்குச்சாலை பகுதியில் மளிகை கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள், காய்கறி கடைகள், பேக்கரிகள் என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை நொய்யல் ஆற்றின் ஓரத்தில் கடைக்காரர்கள் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். அதேபோல் கோழிக்கடைகளில் சேகரிக்கப்படும் கோழிகளின் கழிவுகளையும், அழுகிய காய்களையும் இங்கே கொட்டி வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக கழிவுகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சிகூடலூர் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள 5 மின் கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீர் இன்றி மக்கள் அவதி

கரூர் மாவட்டம், நொய்யல் ரெயில்வே கேட் அருகே குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தார் சாலை ஓரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு அதன் அருகே நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. மின்மோட்டார் மூலம் நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுது ஏற்பட்டதன் காரணமாக மின்மோட்டாரை எடுத்துச் சென்றனர். பின்னர் அந்த மின்மோட்டார் மீண்டும் பொருத்தப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story