தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
காய்ச்சல் பரவும் அபாயம்
திருச்சி பெல்ஸ்கிரவுண்ட் 50-வது வார்டு பகுதியில் குப்பைகள் மற்றும் மழைநீர் வெளியேற்றப்படாததால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்துவதுடன், மாலை நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி கே.கேநகர் சாலை ரங்கநாதன் 2-து தெருவில் சாலையோரம் மின் கம்பம் அமைக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் அந்த மின் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கு இரவு நேரத்தில் எரிவது இல்லை. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், திருவானைக்கோவில் உள்ளே நவராத்திரி இசைவிழா நடைபெறும் மேடைக்கு அருகே பார்வையாளர்கள் அமரும் மேற்கூரையின் ஒருபகுதி சிதலமடைந்து இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்கூரையை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு குளம் மீட்கப்படுமா?
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பிராம்பட்டி தெற்கு, வ.கைகாட்டியில் உள்ள அலாந்தி குளம் தற்போது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது குளத்தில் நடவுபணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழைநீரை சேகரிக்கப்பட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகளை துரத்தும் தெருநாய்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், தொப்பம்பட்டி கிராமம், ஆளிபட்டியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குண்டும், குழியுமான உள்ள சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது அவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
திருச்சி கே.கே.நகர் சண்முகம் தெரு கருப்பையா கேஸ் குடோன் எதிரில் உள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து மோசமாகன நிலையில், காற்று அடித்தால் விழுந்து விடும் நிலையில் உள்ளது. இப்பகுதி வழியாக தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
எரியாத தெருவிளக்குகள்
திருச்சி பிச்சாண்டர் கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிச்சாண்டர்கோவில் ரெயில் நிலையம், ரமேஷ்கார்டன் வீடுகள் அருகே கடந்த 3 மாதங்களாக மூன்று தெருவிளக்குகள் எரியவில்லை, வயர்கள் அறுந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீழக்குன்னுப்பட்டி மேற்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிதிலமடைந்த பள்ளி கட்டிடம்
திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியம், கீழக்குன்னுப்பட்டியில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் சிதிலமடைந்து, தற்போது பெய்யும் மழைநீர் பள்ளி கட்டிடத்தினுல் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தார் சாலை அமைக்க வேண்டும்
திருச்சி மாவட்டம், துறையூர் நகரம் 24-வது வார்டு திருச்சி ரோடு சுந்தரபுரம் என்ற குடியிருப்பு பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலை தற்போது மண் சாலையாக மாறிவிட்டது. இதனால் மழை பெய்யும்போது சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வடிகால் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி சாலையோரம் உள்ள வயல்வெளிகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் விளைபயிர்கள் அழுகும் நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.