தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயனற்ற சேவை மைய கட்டிடம்
கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி சார்பில் சுமார் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பசுபதிபாளையம் பகுதியில் விவசாயிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு சான்றிதழ்களை பெற்று பயனடையும் வகையில் சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இருப்பினும் இங்கு கட்டிடம் கட்டுப்பட்டு பல ஆண்டுகளாகியும் சேவை மையம் தனது சேவையை துவங்காமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதன் காரணமாக புன்னம் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தங்களது பகுதியில் சேவை மையம் இருந்தும் வெளியூர்களுக்கு சென்று சான்றிதழ்கள் பெற்று வரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டும் கல்குவாரிகள்
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம், புன்னம், காருடையாம்பாளையம், உப்புப்பாளையம், பசுபதிபாளையம், பாலமலை, தென்னிலை, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. ஒருசில கல்குவாரிகள் அரசு அனுமதி அளித்ததற்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. சாலை ஓரத்தில் உள்ள கல்குவாரி பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது நிலை தடுமாறி அளவுக்கு அதிகமாக ஆழத்தில் உள்ள கல்குவாரிகளில் வாகனங்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நிறுத்தப்பட்ட அரசு பஸ் இயக்கப்படுமா?
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து கரூர் மாவட்டம், தரகம்பட்டி வழியாக சென்னைக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் இயங்கி கொண்டிருந்த அரசு பஸ் தற்போது கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு அந்த பஸ் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நிழற்குடை கட்டியும் பலனில்லை
கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலையில் கரூர்- ஈரோடு செல்லும் நெடுஞ்சாலை அருகே தார் சாலையின் ஓரத்தில் அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் பஸ் நின்று செல்லும் இடத்தில் கட்டாமல் சிறிது தூரத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளதால் அந்த நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பயனற்று போய் உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அருகே பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம், நல்லிக்கோவில் பகுதியில் மின்சார வாரியம் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன் மின்கம்பம் நடப்பட்டு, அந்த மின் கம்பத்திலிருந்து அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின் கம்பத்தில் உள்ள காங்கிரீட்டுகள் கீழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடமாவட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாதியில் நிற்கும் களம் அமைக்கும் பணி
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளின் நலன் கருதி தரை களம் கட்டப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் களத்திற்குள் தண்ணீர் புகுந்து விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இதன் காரணமாக தரை களத்தை அகற்றிவிட்டு உயரமாக புதிய விவசாய களம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு களம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் களம் அமைக்கும் பணி தொடங்கி பாதையில் நின்று விட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பணி நிறைவு பெறாமல் பாதியிலேயே உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது விலை பொருட்களை கொண்டு வந்து களத்தில் போட்டு காய வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதியில் நிற்கும் விவசாய களத்தை முழுமையாக கட்டிமுடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.