தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கீழே விழும் வாகன ஓட்டிகள்
அரியலுர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஆர்.சி.பாத்திமா தொடக்கப்பள்ளிக்கு செல்லும் சாலையில் இருந்து, பகுத்தறிவு நகர் மெயின் ரோடு வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
போக்குவரத்துக்கு லாயக்கற்ற மண் சாலை
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், நமங்குணம் கிராமத்தில் 6-வது வார்டு நமங்குணம் தெற்கு தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தெருவில் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள மண் சாலை சேறும், சகதியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அகற்றப்படாத ஆபத்தான கட்டிடம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த கட்டிடம் மிகவும் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய பஸ் நிலைய கட்டிடம் கட்டி உள்ளனர். இந்த நிலையில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படும் பழைய பஸ் நிலைய கட்டிடத்தை இன்னும் அகற்றாமல் உள்ளதால் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் தங்களது வீடுகளில் இருந்து இருசக்கர வாகனங்களில் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் வந்து தங்களின் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்திவிட்டு வெளியூர் சென்று வருகின்றனர். இதனால் அவர்களின் வாகனங்கள் வெயிலிலும், மழையிலும் நின்று வீணாகும் நிலை உண்டாவதுடன், திருட்டு நடைபெறவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நோயாளிகள் அவதி
அரியலூர் மாவட்டம், விளாங்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் எதுவும் நிற்காமல் செல்கின்றன. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பஸ் வசதி இன்று பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றாலும், மருத்துவம் பெற்ற பிறகு வீட்டில் செல்ல வேண்டும் என்றாலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.