தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
பெரம்பலூர் நகரப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகள் உள்ளிட்டவை சாலையோரம் கொட்டப்பட்டு வருகின்றன. இவை உடனுக்குடன் அகற்றப்படாத நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக அவற்றிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் அருகில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே உள்ள மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசியவாறு செல்கிறது. இதனால் தற்போது மழைகாலம் என்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பழுதடைந்த அடிபம்பு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் குடிநீர் பயன்பாட்டுக்காக அடிபம்பு ஒன்று அமைக்கப் பட்டது. இதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த அடி பம்பு பழுதடைந்து, சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு ரோடு கீழ் பாலத்தின் வழியாக இரவு நேரங்களில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பயணிகளின் நலன்கருதி பாலத்தினுள் 2 மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக 2 மின் விளக்குகளும் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலையில் மேடு, பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து 2 மின்விளக்குகளும் சரிசெய்யப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.