தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

மழைநீர் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தின் வடக்கு தெருவில் சாலை மோசமாக காட்சியளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்ட்ட அதிகாரிகள் உடனடியாக தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வடிகால் வசதியுடன் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மக்கள்

அரியலூர் மாவட்டம், கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் உள்ள பாண்டியன் ஏரியை சிலர் ஆக்கிரமித்து வசித்து வந்தனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அவர்களுக்கு அரசு வீட்டுமனை வழங்கியது. இதையடுத்து அவர்கள் அந்த இடத்தில் குடியேறி வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் தெருவிளக்கு வசதி இன்றி இப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு வசதி ஏற்படுத்துவதுடன் தெகுப்பு வீடுகள் கட்டிடத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வாகனங்கள்

அரியலூர் மாவட்ட பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் சில வாகனங்கள் அதிக சத்தம் எழுப்பியும், அதிக புகை வெளியேற்றியும் இயக்கப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் மேலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ்களை சரிசெய்ய வேண்டும்

அரியலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் சரிவர பராமரிப்பு இல்லாமல் அழுக்கு படிந்து உள்ளே குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. மேலும் இருக்கைகள் பாழடைந்த நிலையில், சில பஸ்கள் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் காணப்படுகிறது. இதனால் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இவற்றை ஆய்வு செய்து விரைந்து சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்திற்கு இடையூறு

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் முத்துவாஞ்சேரி சாலையில் தனியார் சிமெண்டு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்டு ஆலைக்கு தினமும் ஏராளமான சுண்ணாம்புகள் ஏற்றி வரும் லாரிகள், பல்கர் லாரிகள் மற்றும் நெய்வேலியிலிருந்து நிலக்கரி ஏற்றி வரும் லாரிகள், இதோடு அல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்து குப்பைகளை ஏற்றி வரும் லாரிகள் அதிகளவில் வந்து செல்கின்றன. இந்த லாரிகள் எப்போதும் போக்குவரத்திற்கு இடையூராக முதன்மை சாலையில் இருபுறமும் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் வி. கைகாட்டி புறக்காவல் நிலையம் முதல் தனியார் சிமெண்டு ஆலை வரை தற்சமயம் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாற்றம் அடைந்து வயல் வெளிபோல் காட்சி அளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். சில இடங்களில் சாலையின் வெள்ளை நிற பட்டைகளை மறைத்து சுண்ணாம்புக்கல் மண்கள் மேடாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குரங்குகள் தொல்லை

அரியலூர் மாவட்டம் மெய்க்காவால்புத்தூர் கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து மளிகை பொருட்களையும், தின்பண்டங்களையும் எடுத்துச் செல்வதுடன் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் வசதி வேண்டும்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட வெத்தியார் வெட்டு கிராமத்திற்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து கல்லாத்தூர், அழகர்கோவில், குண்டவெளி வழியாக மீன்சுருட்டி வரை இயங்கி வந்த அரசு பஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லாத்தூரில் இருந்து மீன்சுருட்டி வரை சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story