தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

எரியாத உயர்மின்கோபுர விளக்கு

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையிலிருந்து தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலை வழியாக வண்ணாரப்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள உயர்மின்கோபுர விளக்கு அமைத்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. வண்ணாரப்பட்டி விளக்கு சாலை என்பது பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் அதிகமான வாகனங்கள் சாலையை கடந்து செல்கின்றன. எனவே இரவு நேரங்களில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சந்தையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சியில் செட்டிஊரணியில் நடைபெறும் வாரசந்தையில் அதிக அளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வியாபாரிகளும், சந்தைக்கு வரும் பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குழந்தைகள், பெண்கள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

புதுக்கோட்டையில் அன்னச்சத்திரம் அருகில் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆதனால் தற்போது சிதிலமடைந்த சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கடிக்க வரும் தெருநாய்கள்

புதுக்கோட்டை நகர பகுதி முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவை ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக வீதிகளின் சுற்றித்திரிவதுடன், சாலையில் செல்பவர்களை கடிக்க பாய்கிறது. மேலும் சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

புதுப்பிக்கப்படாத பெயர் பலகை

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள கீழாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லை பகுதியில் கே.ராசியமங்கலம் அருகே கடந்த காலங்களில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி எல்லைகளிலும் அந்தந்த ஊராட்சி மன்ற பெயர் பலகை புதிதாக வைக்கப்படுவது இயல்பு. ஆனால் கீழாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லை பகுதியில் புதிதாக ஊர் பெயர் பலகையை வைக்காமல் கடந்த காலங்களில் அதுவும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனை சீரமைத்து புதிய பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story