தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள தெருக்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் வசிப்போா், சாலையில் சென்று வருவோா் பெரிதும் அச்சப்படுகின்றனா். எனவே இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர்கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் கழிவறையின் மேற்பகுதியில் கருவேல மரங்கள் படர்ந்தநிலையில் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவறையின் மேற்பகுதியில் படர்ந்து இருந்த கருவேல மரங்களை அப்புறப்படுத்தி கழிவறையை பயன்பாட்டிற்கு திறந்துவிட்டனர். இந்த நிலையில் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

காடுபோல் காட்சி அளிக்கும் துணை மின் நிலையம்

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அவ்வை நகர் அருகில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தை சுற்றி அடர்ந்த காடு போல் காட்சி அளிக்கிறது. ‌‌இதனால் அங்கிருந்து விழும் மரம்கள் மற்றும் குப்பைகள் குடியிருப்பு பகுதியில் விழுந்து குடிநீர் குழாய் மற்றும் சுற்றுச்சுவர் சேதம் அடைகின்றன. மேலும் இப்பகுதியில் இருந்து விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதியில் புகும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குளமாகமாறிய சாலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமத்தில் வடக்கு தெரு மற்றும் மேற்கு தெருவில் உள்ள மண் சாலையில் ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைபெய்யும்போது மழைநீர் இந்த பள்ளங்களில் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் எவ்வளவு பெரிய பள்ளம் உள்ளது என கணிக்க முடியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இச்சாலை மழைபெய்யும்போது சேறும், சகதியுமாக காணப்படுவதால் முதியவர்கள், பெண்கள், பள்ளி சிறுவர், சிறுமிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிரமப்படும் மக்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், நக்கசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரவிந்தன் நகர் குடியிருப்பு பகுதியில் பெரும்பாலான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகள் நீண்ட காலமாக மழையினால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பெரியவர்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனை பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் எடுத்துக்கூறியும், கடந்த முறை நடந்த கிராம சபை கூட்டத்தில் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story