தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆக்கிரமிக்கப்பட்ட சாலை
கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் முதல் நெடுகிலும் புகழூர் வாய்க்கால் ஓரத்தில் மண் சாலை போடப்பட்டுள்ளது. இந்த மண் சாலை வழியாக விவசாயிகள் இடுபொருட்களையும், விளைபொருட்களையும் கொண்டு செல்கின்றனர். அதேபோல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்களது வாகனங்களில் வந்து பார்வையிட்டு சென்று வந்தனர். இந்நிலையில் மண்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மண் சாலையின் இருபுறமும் நாணல்கள் மற்றும் பல்வேறு செடி-கொடிகள் முளைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக இந்த மண்சாலை வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்களும் தட்டு தடுமாறி செல்கின்றன. தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மண்சாலை நெடுகிலும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
எரியாத உயர் கோபுர மின் விளக்கு
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே வைரமடை பஸ் நிறுத்தத்தில் கரூர்-கோவை மெயின்ரோட்டில் இரவு நேரத்தில் பொதுமக்கள் அச்சமின்றி நடந்து செல்லும் வகையில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் கோபுரம் மின் விளக்கு கடந்த ஒரு மாதமாக எரியாமல் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் விபத்துகள் ஏற்படவும், சட்டவிரோத செயல்கள் நடக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபத்தான நிலையில் மின்மாற்றி
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே நடையனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு பின்புறம் ஒரு மின்மாற்றி அமைக்கப்பட்டு அதில் இருந்து அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் மின் மோட்டாருக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்களும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்மாற்றி கீழே விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், இப்பகுதியில் உள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடையும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிதிலமடைந்த சுகாதார வளாகம்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் அப்பகுதி பெண்களின் நலன் கருதி அங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக சுகாதார வளாகம் சிதிலமடைந்துவிட்டது. இதன் காரணமாக அந்த சுகாதார வளாகம் பயன்படுத்தாத சூழ்நிலையில் அதை பெண்கள் பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். சுகாதார வளாகத்தை சுற்றி ஏராளமான சீமை கருவேல மரங்களும், பல்வேறு செடி,கொடிகளும் முளைத்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் பெண்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயனற்றுள்ள நீர்த்தேக்க தொட்டி
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்- கொடுமுடி செல்லும் சாலையில் நொய்யல் ரெயில்வே கேட் அருகே அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி லட்சக்கணக்கான ரூபாய் செலவில் தார் சாலை அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதனுள் நீர்மூழ்கி மின்மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர், சின்டெக்ஸ் டேங்க் வைத்து அப்பகுதி பொதுமக்களுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல் தார் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் தாகத்தை தீர்த்து வந்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்ததன் காரணமாக பழுதை நீக்குவதற்காக மின்மோட்டாரை எடுத்துச் சென்றனர். ஆனால் மீண்டும் அந்த மின்மோட்டார் பொருத்தப்படவில்லை. அதன் காரணமாக சில ஆண்டுகளாக சின்டெக்ஸ் டேங்க் வெயிலிலும், மழையிலும் இருப்பதன் காரணமாக மிகவும் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான ரூபாய் வீணாகி வருகிறது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.