தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாகன ஓட்டிகள் அவதி
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எசனை காட்டு மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து ரெட்டைமலை சந்து, மேலப்புலியூர், லாடபுரம் வழியாக பெரம்பலூர்-துறையூர் சாலையை இணைக்கும் தார் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பெண்கள் அவதி
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி கிராமத்தில் ஏராளமான பெண்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிலரது வீடுகளில் கழிவறைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அவர்களின் நலன் கருதி இப்பகுதி பெண்களுக்கு சுகாதார வளாகம் கட்டி கொடுக்க வேண்டும். மேலும் ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு காலனி வசதி ஏற்படுத்தி கொடுப்பதுடன், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கேமராக்கள் பொருத்தப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் பஸ் நிலையத்தில் தினமும் பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என ஏராளமானவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்கிறது. எனவே இந்த பஸ் நிலையத்தில் சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
புதிய ரேஷன் கடை வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இயங்கி வந்த ரேஷன் கடை இடிந்து விழுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே 1,300 குடும்ப அட்டைதாரர்களை கொண்டுள்ள வேப்பூரில் 2 ரேஷன் கடைகள் புதிதாக கட்டி கொடுத்து, அவற்றை முழு நேர கடையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கிடப்பில்போடப்பட்ட சாலை பணி
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் இருந்து சோமண்டாபுதூர் சாலையின் மேற்கு புறமாக ஆலம்பாடி செல்லும் சாலையின் உள்புறம் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் அந்தப்பகுதியில் 100 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் உள்ளது. இந்த சாலையின் வழியாக ஆலம்பாடி மற்றும் நார்க்காரன் கொட்டாய் ஆகிய கிராமங்களுக்கு செல்ல முடியும். இந்த சாலையின் வழியாக தான் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு இடு பொருட்களையும், நிலத்தில் உற்பத்தியாகும் விளை பொருட்களையும் சந்தைக்கும் சென்று வருகிறார்கள். ஆனால் இந்த சாலை குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளித்தது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.67 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு புதிய தார் சாலை அமைக்க கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது தார் சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் மழைக்காலமான இப்போது இந்த சாலையை யாரும் பயன்படுத்த முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.