தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

எரியாத உயர்மின் கோபுர விளக்கு

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையிலிருந்து வண்ணாரப்பட்டி செல்லும் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிவு சாலை அருகே உள்ள உயர்மின்கோபுர விளக்கு அமைத்து 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. வண்ணாரப்பட்டி விளக்கு சாலை என்பது பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் அதிகமான வாகனங்கள் சாலையை கடந்து செல்வதால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் மடத்துக்கடையில் உள்ள உயர்மின் கோபுர விளக்கு கடந்த ஓராண்டாக எரியாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான பயணிகள் நிழற்குடை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, மரவன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் பயணிகள் நிழற்குடை மிகுந்த சேதமடைந்து கடந்த 5 ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிழற்குடையில் மறவன்பட்டி, கோபாலப்பட்டி, கண்ணக்கங்காடு, செட்டிவிடுதி, குகைப்புலியான் கொள்ளை போன்ற கிராமத்தில் இருந்து மாணவ-மாணவிகள், பெரியவர்கள், முதியவர்கள் அனைவரும் பஸ்சுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த பயணிகள் நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தடுப்புகள் அமைக்க கோரிக்கை

புதுக்கோட்டையில் இருந்து கட்டியா வயல் வழியாக அன்னவாசல் செல்லும் சாலையில் கவிநாடு கண்மாய் அருகே 2 சாலைகள் பிரிந்து செல்கிறது. இதில் ஒரு சாலை அன்னவாசலை நோக்கியும், மற்றொரு சாலை குமரமலை நோக்கியும் பிரிகிறது. இந்த சாலைகள பிரிந்து செல்லும் இந்த இடத்தில் 3 சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இதில் வாகனங்கள் செல்லும் போது எந்த சாலையை நோக்கி செல்கிறது என்பதை கவனிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இதனால் விபத்தும் ஏற்படுகிறது. இதனை தடுக்க 3 சாலைகள் சந்திக்கும் இடமாக திகழ்வதில் இரும்பு தடுப்புகள் வைத்து வாகனங்கள் செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் வசதி தேவை

புதுக்கோட்டை ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் ரெயில் நிலையத்திற்கு செல்ல பஸ் வசதி குறைவாக உள்ளது. ரெயில்கள் வந்து செல்லும் நேரத்தை கணக்கிட்டு அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். அந்த வழியாக செல்லும் பஸ்களை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், கந்தர்வகோட்டை ஊராட்சியில் யாதவர் தெருவில் உள்ள மின் கம்பம் மிகவும் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story