தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

ஆபத்தான மின்கம்பம்

புதுக்கோட்டை பழைய பஸ் நிறுத்தம் அருகே பூக்கடை தெரு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் வகையில் சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிறுத்தப்பட்ட பஸ்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் வழித்தடத்தில் அரசு பஸ்களை விட தனியார் பஸ்களே அதிகம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா காலத்திற்கு பின்னர் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் இரவு நேரங்களில் இயக்கப்படுவது இல்லை. இதனால் வேலைக்கு செல்லும் அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், வெளியூர் பயணம் செய்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அனுமதி பெற்றுள்ள நேரத்தில் குறிப்பிட்ட வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்படுவதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மாசடைந்த குளத்து நீர்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள அனவயல் முக்கரை விநாயகர் கோவில் எதிரே உள்ள குளத்து நீர் கருமை நிறமாக மாசடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குரங்குகள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், காரமங்களம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொங்கன் தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாளுக்கு நாள் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள மளிகை பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் செல்வதுடன் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தங்களின் குழந்தைகளை வெளியே அனுப்ப பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியாக விளங்கக்கூடிய அண்ணா சிலை அருகில் உள்ள மார்த்தாண்டபுரம் 1-ம் வீதி சாலையில் பல மாதங்களாக சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு பள்ளமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வகனத்தை பள்ளத்தில் விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடினர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story