தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

குடிநீர் குழாயில் உடைப்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூர் மெயின் ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், சாலையோரம் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் 24 மணி நேரமும் அதிகளவில் சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் நிலக்கரி ஏற்றி செல்லும் லாரிகள் என அனைத்தும் அதிவேகத்தில் செல்கிறது. குறிப்பாக அரியலூர் சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் கூலி வேலைக்கு இரு சக்கர வாகனங்கள் மூலமாக சென்று வருகின்றனர். மேலும் பொது மக்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதியான மாரியம்மன் கோவில், தனியார் வங்கி, பெட்ரோல் விற்பனை நிலையம் என பல்வேறு நிறுவனங்கள் இயங்குகின்றன. இங்கு நடந்தும், இருசக்கர வாகனங்கள் மூலமும் வரும் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. வி.கைகாட்டி மேம்பாலத்திலிருந்து மண்ணுழி பிரிவு பாதை வரை சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்தால் அடிக்கடி அதிகளவில் ஏற்படும் விபத்துகளை தடுக்க முடியும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், உதயநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் சாக்கடை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. அருகிலுள்ள தெருக்களில் இருந்து கழிவுநீர் வாய்க்கால் மூலம் வெளியாகும் கழிவுநீர் பள்ளியில் சுற்றுச்சுவர் அருகிலேயே தேங்கி கிடக்கிறது. அங்கிருந்து கழிவுநீர் வெளியேறி செல்வதற்கு சரியான வாய்க்கால் வசதி இல்லை. எனவே அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீர் பள்ளி மாணவர்களை பாதிக்கும் வகையில் துர்நாற்றம் வீசி வருகிறது. அதில் உற்பத்தியாகும் பல்வேறு நோய்களைப் பரப்பும் கொசுக்கள் பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகளை கடிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து கழிவுநீரை அப்புறப்படுத்த மற்றும் அங்கு கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

உயர் மின் கோபுர விளக்கு வேண்டும்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பஸ் நிறுத்தம் மற்றும் சந்தைக்கு செல்லும் பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து உள்ளதால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவுல் இப்பகுதியில் செல்ல பெண்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரப்படாத ஏரிகள்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி கிராமத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி சமேத சொர்ணபுரீஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளம் மற்றும் ஊரில் உள்ள நீராழி ஏரி, பெரிய ஏரி, கீழேரி, அய்யனார் குளத்து ஏரி போன்ற அனைத்து ஏரிகளும் நீண்ட காலமாக சுத்தம் செய்யப்படாமலே உள்ளது. இதனால் இப்பகுதியில் மழைபெய்யும்போது மழைநீரை முழுமையாக சேகரித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் வெயில் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story