தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

வர்ணம் பூசப்படாத வேகத்தடை

பெரம்பலூர்- துறையூர் சாலையில் கல்யாண் நகர் பகுதியில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையின் மீது பூசப்பட்டு இருந்த வர்ணங்கள் தற்போது அழிந்தநிலையில் மீண்டும் வர்ணங்கள் பூசப்படாமல் காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை வேகமாக விட்டு நிலை தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதே நிலை நீடித்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியலமைப்பு தலைவர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்தநிலையில் அவர்கள் அணிவித்த மாலைகள் அகற்றப்படாமல் காய்ந்த நிலையில் காணப்படுவதினால் அம்பேத்கரின் சிலைக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த மாலைகளை அகற்றி சிலையை பராமரித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

பெண்கள் அவதி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், சிறுவயலூர் கிராமத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் புற்கள் மண்டியும், கதவுகள் இல்லாமலும் உள்ளது. இதனால் இதனை பயன்படுத்த முடியாமல் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையின் நடுவே உள்ள மின்கம்பம்

பெரம்பலூர்- எளம்பலூர் சாலை சேவா நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் அருகே சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே மின்கம்பம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றி சாலையோரம் நடவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் நாளுக்கு நாள் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் பள்ளம்

பெரம்பலூர்-ஆத்தூர் நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை வேதநதி ஆற்றுப்பாலம் அருகே சாலையில் பெரிய அளவில் பள்ளமும், இதே சாலையில் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே சாலையில் ஒரு பள்ளமும் உள்ளது. முக்கிய நெடுஞ்சாலை என்பதால் இந்த சாலையில் அதிக போக்குவரத்து உள்ளது. இதில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பலர் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் உள்ள பள்ளங்களை தார் ஊற்றி சீரமைக்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோர மரங்கள் பாதுகாக்கப்படுமா?

பெரம்பலூர்- அரியலூர் சாலையின் ஓரத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு பலன்களை வழங்கி வந்த புளிய மரங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சாலை விரிவாக்கத்தின் போது வெட்டப்பட்டது. தற்போது மிககுறைவான நிழல் தரும் மரங்களே இச்சாலையில் உள்ளது. அந்த மரங்களிலும், சில மரங்கள் குறிப்பாக நான்கு ரோடு முதல் எறையூர் பாதை வரை இடைப்பட்ட பகுதியில் திடீர் திடீர் என்று பட்டுப்போகிறது. ஆகையினால் பட்டுப்போன மரங்களை முறையாக ஆய்வு செய்து மீதம் உள்ள மரங்களையாவது முறையாக பாதுகாத்து பலன் அளிக்கும் வகையில் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story