தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

நான்கு வழி சாலை அமைக்கப்படுமா?

அரியலூரில் இருந்து வி.கைகாட்டி வரை உள்ள சுமார் 10 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையில் வி.கைகாட்டி பகுதிகளில் இருந்து அரியலூர் பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்பு கல் ஏற்றிக்கொண்டு தினம்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் செல்கின்றனர். ஆனால் அது ஒரு வழி பாதையாக மட்டுமே உள்ளது. இதனால் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றி தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோர பள்ளம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் பழைய குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரே சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு நெடு நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் சாலையோரம் செல்லும் மாணவ-மாணவிகள் இந்த பள்ளத்தில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெயர்ந்து கிடக்கும் சிமெண்டு சாலை

அரியலூர் கள்ளக்குறிச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுடுகாட்டிற்கு செல்வதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சாலை தற்போது சிதிலமடைந்து பெயர்ந்த நிலையில் காணப்படுவதால் இந்த வழியாக இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல பெரிதும் சிரமமாக உள்ளது. மேலும் மழை பெய்யும்போது இப்பகுதியில் முறையான வடிகால் வசதியின்றி இந்த சிமெண்டு சாலையின் ஓரங்களில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

அரியலூர் குறிஞ்சான் குளக்கரை மற்றும் அரச நிலையிட்டான் ஏரி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை சிதிலமடைந்து காணப்படுவதுடன் சாலையோரங்களில் அதிக அளவிலான கருவேல மரங்கள் முளைத்து சாலையை அக்கிரமித்துள்ளது. இதனால் இந்த சாலையின் வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குளம்போல் தேங்கியுள்ள கழிவுநீர்

அரியலூர் ரெயில் நிலையம் பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இன்றி ரெயில் நிலையத்தின் அருகே கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story