தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

தெரு நாய்கள் தொல்லை

பெரம்பலூர் நகரப் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

வெள்ளாற்றின் குறுக்கே கீழக்குடிக்காடு கிராமத்தின் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து கிழுமத்தூர்- கிழுமத்தூர் குடிக்காடு, அத்தியூர், கைப்பெரம்பலூர், வயலூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பாசன ஏரிகளுக்கு நீரைக் கொண்டு சேர்க்கும் வாய்க்காலின் தடுப்புச்சுவரில், ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு நீரானது மீண்டும் ஆற்றுக்கே செல்கிறது. இதனால் பாசன ஏரிகளுக்குச் செல்லும் நீரின் அளவு குறைந்து நீர்மட்டத்தை பாதிக்கும் நிலை உள்ளது. ஆகையினால் உரிய நிதி ஒதுக்கி உடைப்பை சீர்செய்வதோடு, தடுப்புச்சுவரை புதுப்பிக்கவும் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயன்படுத்த முடியாத கழிவறை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக இப்பள்ளி அருகே கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலம் கட்டப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம் விளாமுத்தூர் அருகே சிறுவாச்சூர் செல்லும் சாலையின் ஓரத்தில் செல்லும் ஓடையில் மழைபெய்யும்போது அதிக அளவில் மழைநீர் செல்கிறது. இந்த மழைநீர் சாலையின் குறுக்கே செல்ல வழியின்றி சாலையில் வழிந்த நிலையில் செல்கிறது. இதனால் மழைபெய்யும்போது இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதனை தடுக்கும் வகையில் சாலையின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்திற்கு இடையூறு

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையின் ஓரங்களில் உரிய அனுமதியின்றி ஏராளமான விளம்பர பதாகைகள் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story