தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

புகார் பெட்டிக்கு நன்றி

பெரம்பலூர் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2017-18-ம் நிதியாண்டில் செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ 8.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த மையத்தில் குழந்தைகள் ஏறி இறங்கும் படிகளில் தற்போது கைப்பிடி, தடுப்பு சுவர் இல்லாததால் குழந்தைகள் கவனக் குறைவால் செல்லும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த செங்குணம் ஊராட்சி நிர்வாகம் அங்கன்வாடி மையத்தின் படியில் இரும்பாலான கைப்பிடி தடுப்பு அமைத்தது. இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

புகார் பெட்டிக்கு நன்றி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகே கூத்தனூர் செல்லும் சாலையில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. அதனை சரி செய்ய பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் குழாயில் கசிவு சரி செய்யப்பட்டது. அதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமலேயே காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை இருந்து வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

100 நாள் வேலை தொடருமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை சுமார் ஒரு மாத காலமாக அந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதனால் அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 நாள் வேலை வேண்டி அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்தவர்களில், பலருக்கு இன்னும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. எனவே அந்த தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை தொடர்ந்து வழங்கிடவும், அந்த வேலைக்கு அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அட்டை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

புதர் மண்டிய சாலை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை சுடுகாடு பாதை மற்றும் பெரியாண்டவர் கோவில் வழியாக மணியார் ஏரிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் மயானத்துக்கு செல்பவர்கள், பெரியாண்டவர் கோவிலுக்கு செல்பவர்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேதநதி ஆற்று வழியாக மணியார் ஏரிக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிழற்குடை வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாட்டிற்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். மக்கள் ஒதுங்கி நிற்கு இப்பகுதியில் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் மழையிலும், வெயிலிலும் நின்று மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story