தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
தமிழகத்தின் மாநில மரமாக விளங்கும் பனை மரத்தை பாதுகாக்க தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் கடந்தாண்டு வெளியிட்டுள்ளது. மழையை ஈர்க்கும் மையங்களாகவும், நீர் நிலைகளின் காவலனாகவும், மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிப்பதிலும் பனை மரங்கள் முக்கிய பங்காற்றுவதே இதற்கு முக்கிய காரணங்களாகும். அதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் மன்னார் கோவில் தெற்கு புறத்தில் சிறிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் அரசு அதிகாரிகள் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றிலும் ஏரியின் கரையை வலுப்படுத்தி,100 நாள் வேலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொண்டு பனை விதைகளை சேகரித்து, அதனை அவர்களை கொண்டு ஏரி கரைகளில் நடவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குண்டும், குழியுமான சாலை
பெரம்பலூர் மாவட்டம், தேனூர் கிராமத்தில் இருந்து தொட்டியப்பட்டி, மாவிலங்கை செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பஸ் வசதி வேண்டும்
பெரம்பலூர் இருந்து செட்டிகுளம், மாவிலங்கை, தொட்டியப்பட்டி, தேனூர் வழியாக புத்தனாம்பட்டிக்கு காலை, மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே காலை, மாலை நேரங்களில் இப்பகுதியில் அரசு பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மின் வசதி வேண்டும்
பெரம்பலூர் வட்டம், செங்குணம் அண்ணா நகர் பகுதியில் ஓர் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு பணியாளர், ஒரு உதவியாளர் என இருவர் பணிபுரிந்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட மழலை குழந்தைகள் பயில்கின்றனர். இம்மையத்தின் மின் மீட்டர் பெட்டியில் பழுது ஏற்பட்டுள்ளதால் மின் வசதிகள் இன்றி இம்மையம் செயல்பட்டு வருகிறது. கம்பத்தின் வயர்களும், மின் மீட்டர் பெட்டியும் அந்தரத்தில் தொங்கி காட்சி அளிக்கிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் குழந்தைகள் மின்வசதி இன்றி பெரிதும் அவதியுற்று வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மின் மீட்டர் பெட்டியில் பழுதுகளை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் இடத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.