தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தெருநாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்வோர்களையும், வாகனங்களில் செல்வோரையும் விரட்டுவதால், பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். பள்ளிகளுக்கு குழந்தைகளை தனியே அனுப்பபயந்து, பெற்றோர்கள் கையில் குச்சியுடன் உடன் செல்கின்றனர். கூட்டமாக செல்லும் நாய்கள் ஆடு, கோழிகளையும் விட்டு வைப்பதில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை அப்புறப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த மின்கம்பம்

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நாகமங்கலத்தில் உள்ள சமுதாய கூடத்தின் வடபுறம் மேல நாகமங்கலத்திற்கு செல்லும் சாலையில் உள்ள 2 மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்து சற்று சாய்ந்த நிலையில் ஒடிந்து கீழே விழுந்துவிடும் அபாயத்தில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின் கம்பியானது தாழ்வாக செல்கிறது. இதனால் அவ்வழியே லாரி, வேன் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி விட்டு மின் கம்பியை உயரே இழுத்து கட்டுமாறு மணிகண்டம் மின்வாரிய அலுவலக அலுவலர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அது பற்றிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நாகமங்கலத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி மின் கம்பிகளை உயரே இழுத்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story