தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாகன ஓட்டிகள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள மேலாத்தூர் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை ஓரங்களில் ஊர் பெயர் பலகை மற்றும் வேகத்தடை குறித்த எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதன் மீது எந்தவொரு சமூக அக்கறையும் இல்லாமல் மர்ம நபர்கள் சுவரொட்டிகளை ஒட்டி சென்று விடுகின்றனர். இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வடகாடு.
ஆதார் சேவை மையம் அமைக்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் சுற்றுவட்டார கிராமங்களான ஒலியமங்கலம், மேலத்தானியம், கொன்னையம்பட்டி, நல்லூர், கூடலூர், எம். உசிலம்பட்டி, முள்ளிப்பட்டி, ஆலம்பட்டி, இடையாத்தூர், மறவாமதுரை உள்பட 15-க்கும் மேற்பட்ட ஊராட்சி பொதுமக்கள் புதிதாக ஆதார் எடுத்தல், பெயர், முகவரி திருத்தம் செய்தல் மற்றும் செல்போன் நம்பர் பதிவு ஏற்றுதல் போன்ற பணிகளுக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்னமராவதிக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காரையூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காரையூரில் ஆதார் சேவை மையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காரையூர்.