தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்திலுள்ள புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. 10 அடி அகலமுள்ள சிமெண்டு நடைபாதை, அங்குள்ள தரைக்கடை வியாபாரிகளால் இருபுறமும் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு 4 அடி இடைவெளியில் சுற்றுலா பயணிகள் சென்று வருவதால் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுற்றுலா பயணிகள், புளியஞ்சோலை.
குடியிருப்பில் புகும் கழிவுநீர்
திருச்சி அண்ணாநகர் தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. மேலும் இந்த கழிவுநீர் குடிநீருடன் கலந்து கலங்கலான தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை மக்கள் பயன்படுத்தும்போது அவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கிருஷ்ணமூர்த்தி, தென்னூர்.