தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படுமா?
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர். அதில் கைக்குழந்தைகளுடன் கூடிய தாய்மார்களும் இறை வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இது போன்று கைக்குழந்தைகளுடன் வருகை தரும் தாய்மார்களுக்கு 3 வயது வரை உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் கட்டணமில்லாமல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான அறிவிப்பு பலகைகள் கோவில் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதேப்போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழங்கப்படுவது போல் திருச்சி மாவட்டம் சமயபுரத்திலும் 3 வயது வரை உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் இலவசமாக வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சரவணன் நடேசன், சமயபுரம்.
புதிய புறவழிச்சாலையில் பஸ்கள் இயக்கப்படுமா?
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ஜெயங்கொண்டம், கங்கைகொண்டசோழபுரம், எக்ஸ் ரோடு, மீன்சுருட்டி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, குமராட்சி வழியாக சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் நம்பர் ஒன் டோல்கேட் பழூர் சாலையில் இருந்து பல கோடி ரூபாய் பொருட்செலவில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள் மட்டுமே சென்று வருகிறது. பொதுப்போக்குவரத்தான பயணியர் போக்குவரத்து சேவை இன்றளவிலும் ஆரம்பிக்கப்படவில்லை. ஜெயங்கொண்டம், கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் செல்லும் பொதுமக்களின் பயண நேரத்தை குறைப்பதற்காகவும் எளிதாக சென்று வருவதற்காகவும் அமைக்கப்பட்ட சாலையில் அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயங்காமல் உள்ளது, பயணிகளை வருத்தமடையச் செய்கிறது. எனவே திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம், கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் செல்லும் விரைவு பஸ்களை நம்பர் ஒன் டோல்கேட் பழூரில் புதிதாக பல கோடி செலவில் உருவாக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நடேசன், திருச்சி.
தார் சாலை வேண்டும்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், வடக்கு தத்தமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் தார்ச்சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வடக்கு தத்தமங்கலம்.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், ஏவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பம்பட்டி கிராமத்தில் இருந்து திருச்சி-சேலம் மெயின் ரோட்டை இணைக்கும் இணைப்பு சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கருப்பம்பட்டி.