தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குடிநீர் இன்றி மக்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேகாதபட்டி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதுமான தண்ணீர் இன்றி இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் என அனைவரும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தங்களின் அன்றாட தேவைக்கான தண்ணீரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்களில் இருந்து எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வேகாதபட்டி.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள நெருஞ்சிக்குடியிலிருந்து கைவேலிபட்டி வழியாக செல்லும் சேரனூர் விலக்கு ரோடு வரை தார்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இச்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் மண் சாலைபோல் காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் வழியாக ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் சென்று வருகின்றனர். இவர்கள் குண்டும், குழியுமான சாலையில் அவ்வப்போது கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

திலகவதி, நெருஞ்சிக்குடி.

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மலைக்குடிப்பட்டி செட்டியார் நடுத்தெரு குடியிருப்பு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சிதிலமடைந்து அதன் மேல் பகுதி துண்டான நிலையில் காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், செட்டியார் நடுத்தெரு.

விபத்து அபாயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு தெற்கு முக்கம் பகுதியில் குறுகலான வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் சாலையோரம் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது. மேலும் நெடுஞ்சாலை பகுதியில் அதி வேகமாக வாகனங்கள் வருவதால் பொருட்கள் வாங்க ரேஷன் கடை முன்பு நிற்கும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு அதிக அளவில் இருப்பதால், இந்த ரேஷன் கடையை இடமாற்றம் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

லலிதா, வடகாடு.


Next Story