தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

நோய் தொற்று பரவும் அபாயம்

சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புகழூர் பிரிவு சாலை அருகில் தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் பாலத்துறை பகுதிகளில் செயல்பட்டு வரும் வாத்து, கறிக்கோழி கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள், மருத்துவக்கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகளை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து போட்டுச்செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் வீட்டு இடிபாடு கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பழனிவேல், புகழூர் பிரிவு சாலை.

தொடரும் விபத்துகள்

கொடுமுடி, ஒத்தக்கடை, சாலைப்புதூர், நொய்யல், பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இரட்டை டிப்பருடன் கூடிய டிராக்டர்களை பல்வேறு வகையான சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஓட்டி வருகின்றனர். இதனால் நொய்யல்-வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இரட்டை டிப்பரில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்லும் டிராக்டரால் பிரேக் பிடிக்காமல் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இரட்டை டிப்பர்கள் இருப்பதால் பிரேக் போட்டாலும் உடனடியாக இரண்டு டிப்பர்களும் நிற்பதில்லை. போகும் வேகத்தில் நகர்ந்து கொண்டு சென்று முன்னாள் செல்லும் வாகனத்தின் மீது டிராக்டர் என்ஜின் மோதி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் இரவு நேரங்களில் இரட்டை டிப்பர்களை ஓட்டி செல்லும்போது 2 டிப்பர்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் டிப்பர் மீது மோதியதில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், நொய்யல்.

வாகன ஓட்டிகள் அவதி

கரூர்- தேசிய நெடுஞ்சாலை மற்றும் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை பாலத்துறை வழியாக செல்கிறது. இந்நிலையில் பாலத்துறை முதல் தவுட்டுப்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல், பரமத்தி வேலூரில் இருந்து கொடுமுடி, ஈரோடு, பல்லடம், கோவை, திருப்பூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து பாலத்துறை பிரிவு சாலையில் சென்று கூலக்கவுண்டனூர், கடைவீதி, மலை வீதி, வேலாயுதம்பாளையம் வழியாக சென்று வந்தன. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் பாலத்துறை பிரிவு வழியாக செல்லும் சாலையை மேம்பாலம் அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் நெடுகிலும் நிரந்தரமாக வாகனங்கள் செல்லாதவாறு அடைத்து விட்டனர். அனைத்து வாகனங்களும் செல்ல முடியாதபடி தடுப்பு ஏற்படுத்தி விட்டனர். இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று மேம்பாலம் வழியாக வேலாயுதம்பாளையம் வந்து அந்த வழியாக செல்கின்றன. பஸ்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக செல்வதால் பாலதுறையில் இருந்து வேலாயுதம்பாளையம் வரை உள்ள பொதுமக்கள் பஸ்சில் ஏறி வெளியூர்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்துறை பிரிவு சாலை வழியாக அனைத்து வாகனங்களும் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், பாலத்துறை.


Next Story